தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையின் கிண்டி, ஆதம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்தது.
அதே போல் சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்தது.
மேலும் இன்று டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 24-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.