சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பேராசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி நிர்வாக அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கோயம்பேடு பகுதியில் இயங்கிவரும் தூய தாமஸ் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவியிடம் ஆங்கிலத் துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மாணவ மாணவிகள், கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் தமிழ்செல்வன், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும், மாணவி ஒருவருக்கு நேரடியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே மாணவர்களோடு கல்லூரி முதல்வர் தங்கவேல் சமரசம் பேசியது தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து, கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கல்லூரி முதல்வர் தங்கவேல் ஆங்கில துறை பேராசிரியர் தமிழ்செல்வனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், முதல்வர் தலைமையில் கமிட்டி அமைத்து, விசாரணை செய்து நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.