Arappor Iyakkam-சென்னை ,கோவை, மாநகராட்சி ஊழல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
SP.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு:
அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து 5 நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை மீது அவமதிப்பு வழக்கு:
கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக சென்னை கோவை மாநகராட்சி டெண்டர் வழங்கிய ஊழலில் அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து இருந்தது.
இதன் மீது 2021 ஆம் ஆண்டு FIR No 16 லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. இந்த FIR ரத்து செய்ய முன்னாள் அமைச்சர் வேலுமணி (SP Velumani) உயர் நீதிமன்றத்தை நாடிய பொழுது, FIR மீது முகாந்திரம் உள்ளது எனவே FIR ஐ ரத்து செய்ய முடியாது என்றும் அவருடைய பெயரை மட்டும் FIR ல் இருந்து நீக்கியும் உத்தரவு வழங்கியது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஆதாரங்கள் திரட்டப்பட்டால் குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
பிறகு FIR இல் உள்ள மேலும் ஐந்து நிறுவனங்கள் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடிய பொழுது FIR ஐ ரத்து செய்ய முடியாது என்றும் 6 வார காலங்களுக்குள் சென்னை கோவை மாநகராட்சி ஊழல் வழக்கு FIR மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 2023 இல் உத்தரவிட்டது.
ஆனால் 35 வாரம் கடந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது, விசாரணை முடிந்து விட்டது என்றும் குற்றப்பத்திரிகை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆவண சரிபார்ப்பு நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை இரண்டு வார காலத்திற்குள் முழுவதுமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.