சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,நாகப்பட்டினம்,திருவாரூ, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர், நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குறிப்பாக பெரம்பூர், அண்ணாசாலை, ஜிபி ரோடு,சூளைமேடு புளியந்தோப்பு, பிராட்வே, மண்ணடி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், செனாய்நகர், அமைந்தகரை, பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர் கனமழையால் மழை நீரோடு கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடிகால் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி ஒருபுறம் செய்து வந்தாலும் அவை முழுமையாக பூர்த்தியடையாமல் இருப்பதால் ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.