இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
“இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22-7-2024 அன்று IND-TN-10-MM-2517 IND-TN-10-MM-284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22-ம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களை, வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் (Chief Minister M. K. Stalin).