நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இந்தியன் 2’ (indian 2) படத்தில் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.
இதற்கிடையே, லைக்காவுக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவும் இந்தப் படம் தாமதமான நிலையில், தற்போது அந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து இந்தியன் 2 (indian 2) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ஆர்சி 15 படத்தையும் துவங்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘இந்தியன் 2’, ‘ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும், 2 தயாரிப்பாளர்களுடன் பேசி தனித்தனியாக ஷெட்யூல்கள் போட்டு ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர்.
இந்நிலையில், பல்வேறு தடங்கல்களளுக்குப் பின்னர் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய வில்லன் யார் என்பதை படக் குழுவினர் இதுவரை வெளியிடாமல் இருந்தனர்.
தற்போது, இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,படத்தில் தனக்கான ஷெட்யூல்களை எஸ்.ஜே. சூர்யா முடித்துவிட்டார் என்றும், இந்த படத்தில் அதிக தொகைய ஊதியமாக பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், படத்தில், அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.