கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பிள்ளைகள் வளர்ப்பது குறித்து பெற்றோர்களின் கவனம் எவ்வாறு இருக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
”என்னை தேர்ந்தெடுத்துள்ள சென்னை கொளத்தூர் தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாமை விரைவாக நடத்த வேண்டும். துறைமுகம் தொகுதியிலும் நடத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் நடத்த வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் என்ற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள். இளைஞர்களுக்கு தகுதி ஏற்ப வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். இந்த வேலை வாய்ப்பு முகாம் எனக்கு திருப்தி அளிக்கிறது.
ஒரு லட்சமாவது வேலை வாய்ப்புக்கான ஆர்டரை கொடுக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது பெருமையாக உள்ளது. இதைவிட முதலமைச்சருக்கு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது. சத்யா என்ற மாணவிக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து நான் நொருங்கி போயுள்ளேன்.
அதை அறிந்தவர்கள் துயரத்தில் இருப்பார்கள். சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்க்கிறார்களா என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில நிகழ கூடாது. இதுவல்ல நாம் காண விரும்ப கூடிய சமூகம், இனி எந்த பெண்ணுக்கும் இது போன்று நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது.
தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அறிவாற்றல், தனித் திறமையில், சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். பாட புத்தக கல்வி மட்டுமல்ல சமூக கல்வியும் அவசியமானது. தன்னைப் போலவே பிற உயிரையும் மதிக்க கற்றுத் தர வேண்டும். நல்லொழுக்கம் பண்பும் கொண்டவர்களாக இளைஞர்கள் வளர்ந்து வாழ்ந்து சமூகத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் எந்த வகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. பள்ளி கல்லூரிகளும் பெற்றோர்களும் இளைய சக்தியை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.