நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம், நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.பொதுமக்கள் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.