மதுரையில் மறைந்த பிரபல பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். சினிமா துறையில் 11 மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை டி.எம்.எஸ். பாடி தமிழக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் புகழ் பெற்ற பாடகர் டி.எம்.எஸ்.-க்கு மதுரையில் நேற்று சிலை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
தமிழ் சினிமாவை தனது காந்த குரலால் கட்டிப் போட்டு – நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது சிலையை மதுரையில் திறந்து வைத்தேன்.
24 வயதில் பாடத் துவங்கி, 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் திரைப்பாடல்கள், 2500 பக்திப் பாடல்களைப் பாடிய அவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பக்திப் பாடல்கள் இன்றுவரை தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைப் பகுதிக்கு ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டினோம்.
“திரை இசை, மக்கள் இசை யாரும் அடையாத உயரத்தைப் பெற்றவர் டி.எம்.எஸ். 1950-ஆம் ஆண்டு மந்திரிகுமாரி காலத்தில் இருந்து எனக்கு நண்பர். நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் வித்தைக்காரர்” என முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவர்.
கலைஞரின் வரிகளில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார்.
காலத்தால் அழியாத பாடல்கள் பல பாடிய அவர் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவார் என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.