ITamilTv

“தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது பெள்ளி பரபரப்பு புகார் – புகாரை வாபஸ் வாங்வே மாட்டேன்!

Spread the love

“தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வல்ஸ் கார், வீடு வாங்கி தருவதாக கூறி தங்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக பெள்ளி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வல்ஸ் இயக்கினார். இந்த படத்தில் யானைகளுக்கும், பாகனங்களுக்கும் இடையே உள்ள உறவை அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதையடுத்து, இந்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி இருவரும் பிரபலமாகினர். மேலும், இப்படம் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது.

இந்நிலையில், தற்போது யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியரை ஆவணப்பட இயக்குநர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இயக்குநர் கார்த்திகி மீது பொம்மன், பெள்ளி தம்பதியினர் வழக்கு தொடர்ந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஆவணப் படத்தில் நடித்த பெள்ளி கூறுகையில்..

இயக்குனர் கார்த்திகி கோன்சால்வல்ஸ் ஆவணப்படம் இயக்கும் போது தங்களுக்கும், தங்கள் பேத்தியின் திருமண செலவிற்கும் உதவி செய்வதாக கூறினார். ஆனால், ஆஸ்கர் விருது பெற்ற பின் எங்களை கண்டு கொள்ளவில்லை. செல்போனில் அவரை தொடர்பு கொண்டாலும் அழைப்பை துண்டித்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல், எங்களுக்கு வீடு, கார் மற்றும் பண உதவி செய்ததாகவும், எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாக பொய் கூறுகிறார். இரண்டு வருடமாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பிற்கு இயக்குநர் கார்த்திகி எங்களிடம் பணம் கேட்டார். படம் வெளியானதும், பணத்தை திரும்ப தருவதாக கூறினார். இதனால் எங்கள் பேத்தியின் திருமணத்திற்காக வங்கி கணக்கில் வைத்திருந்த பணத்தை அவரிடம் கொடுத்தோம்.

ஆனால் தற்போது வரை அவர் அந்த பணத்தை எங்களுக்கு திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டு செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் தான் பிசியாக உள்ளேன் என இணைப்பை துண்டித்து விடுகிறார்.

இரண்டு வருட படப்பிடிப்பின் போது தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவருக்கு அறைகளை சுத்தம் செய்து கொடுப்பது உள்ளிட்ட எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தோம். பெற்ற மகளைப் போல் அவரிடம் பழகினோம். ஆனால், ஆஸ்கர் விருது பெற்ற பின் அவர் தங்களுக்கு வீடு, கார் வாங்கி கொடுத்ததாகவும் மற்றும் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாகவும் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதனால், இயக்குநர் கார்த்திகி கோன்சால்வல்ஸ் மீது ஆதிவாசி வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடர்ந்துள்ளோம். அதனை திரும்ப பெற மாட்டேன். என்று கூறியுள்ளார் பெள்ளி.


Spread the love
Exit mobile version