ஆதித்யா எல்-1’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முக்கிய இலக்காக சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது .
இந்நிலையில் ஆதித்யா L-1 இன்று, விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.
அதன் படி இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா L-1 இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
ஆதித்யா எல்-1’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா -L1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வாழ்த்துச் செய்தியில் இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா-எல்1 இன் ஏவுதல், இந்தியாவின் உள்நாட்டு விண்வெளித் திட்டத்தை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு முக்கிய சாதனையாகும். விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் வாழ்த்துகிறேன். இஸ்ரோவின் ஆய்வுப் பணி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட பதிவில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் செலுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்து எனது மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிஹர்ஷாஜிக்கும், அவரது குழுவினருக்கும் எனது சார்பாகவும், அதிமுக சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட பதிவில், வானம் எல்லையே இல்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இரவு, பகலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர் என கூறினார்.