தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் 4-ம் கட்டமாக, மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழக அரசின் சாா்பில் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 20,000 இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23,000 இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் நான்காவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுகின்றனா். இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும்.
அக்டோபர் இறுதிக்குள் 1.50 கோடி அளவுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.