திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தலும் தொகுதி பங்கீடும் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு முன்பு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2, கொமதேகவுக்கு 2 மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பேசிய மு.வீரபாண்டியன், கடந்த தேர்தலை விட அதிக இடங்கள் கேட்டிருந்தாலும், கூட்டணியின் நிலைமை மற்றும் பிற கட்சிகள் இணைந்துள்ள சூழ்நிலை காரணமாக 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், கூட்டணியில் எந்த அழுத்தமும் இன்றி, பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

