உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற 14 வது லீக் போட்டியில் இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது . அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர், ஸ்மித் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார் . பொறுப்புடன் விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து மார்னஸ் லபுசேன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் பலமான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இவர்களின் நிதான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி ஓரளவு உறுதியானது.
இதையடுத்து களம் கண்ட மேக்ஸ்வெல் அதிரடியாக ஆட 88 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்த இரு அணிகளும் தோல்வி அடைந்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியையும் இலங்கை அணி தனது ஹட்ரிக் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.