உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டி லக்னோவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 87 ரங்களும் . சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட் செய்தது . பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி பேட்டிங்கில் ஆரம்பம் முதலே சொதப்ப ஆரம்பித்தது.
அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்கள வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 34.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 6 அணிகளுடன் விளையாடியுள்ள இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தாய் மண்ணில் கலக்கி வரும் இந்திய அணி இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.