ஶ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ மீது அதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார் பரபரப்பு அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மான்ராஜ். இவரது மனைவி வசந்தி மான்ராஜ் மாவட்ட சேர்மனாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இதே பகுதிக்கு உட்பட்ட 3-வது வார்டில் மாவட்ட கவுன்சிலராக இருக்கும் கணேசன் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் .
அந்த மனுவில், “தனது வார்டுக்கான நலத்திட்டங்களை செய்வதற்காக மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் சேர்மன் வசந்தி மான்ராஜிடம் நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டதாகவும், வசந்தி மான்ராஜ் இதற்கு மறுப்பு தெரிவித்து, அவருடைய கணவர் எம்.எல்.ஏ மான்ராஜ் கட்சி நிகழ்ச்சியின் போது எனக்குப் பல முறை மிரட்டல் விடுத்துள்ளார்.
நேற்று மதியம் செல்போனில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ மான்ராஜ், தன்னுடைய சகோதரரை மிரட்டித்தான் அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டதாகவும், ஏற்கெனவே இரண்டு பேரை காரில் வைத்து எரித்து கொலை செய்ததாகவும் , அதே போல் என்னையும் எரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதை தொடர்ந்து தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் தெரிவித்துள்ளார் .
மேலும், இது தொடர்பாக செல்போன் குரல் பதிவையும் கணேசன் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மீது அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.