பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் கனமழையால் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது, 40 பேர் பயணிக்கக் கூடிய படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர்.
இதனால், படகின் ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விபத்து பற்றி கூறுகையில்..டோக்சுரி புயல் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி ஏரியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்திய போது இந்த விபத்து ஏற்பட்டது எனவும், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 40 பேர் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள் யாரும் லைப் ஜாக்கெட் அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.