கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனரும்,இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ரூ.1 லட்சம் – ரூ.5 கோடி வரை சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்து நிரந்தர வைப்புத்தொகை வைத்துள்ளனர்.
மக்களிடம் பணம் பெற்று, முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே, முதலீடு செய்யும் பணத்திற்கு 10% – 11% வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும், பல நூறு கோடி மோசடி செய்துவிட்டதாகவும் கூறி பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு கடந்த ஜுன் 6 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : கணவன் தகாத உறவு : பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி… அதிர்ச்சி வீடியோ!!
மேலும் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோதே சுற்றி வளைத்து தேவநாதனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்யப்பட்டது. பின்னர் காவல்துறை வாகனத்தில் சென்னை அழைத்துச் சென்றனர்.
மேலும் இக்கைதுக்கு பின்னால் திமுக இருக்கிறது என்ற சலசலப்பும் எழுந்துள்ளது. காரணம், ஏற்கனவே தேவநாதன் யாதவ் பாஜக கூட்டணியில் இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் 2026 தேர்தலில் யாதவ் சமூக வாக்குகள் தேவநாதனால் சிதறிப் போக வாய்ப்புள்ளது என கணக்கு போட்டே இந்த கைது நடந்திருக்கிறது.
உண்மையாகவே தேவநாதன் கைது செய்யபட வேண்டுமென திமுக நினைத்திருந்தால் பல மாதங்களுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும். ஏனென்றால் நீண்ட காலமாக தேவநதனின் நிதி நிறுவன மோசடி விவகாரம் புகைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இப்போது கைது செய்திருப்பது சற்று சந்தேகத்தை எழுப்புகிறது என அரசியல் விமர்சகர்களும் தங்கள் பங்குக்கு விமர்சிக்கின்றனர்.