தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிரந்தரமாக மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இதனால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ராமேசுவரம் சல்லிமலையில் 1,060 அடி உயர உயர் சக்திஒளிபரப்பு கோபுரம் அமைந்துஉள்ளது. இது சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரம், ஆசியாவிலும் உயரமான ஒளிபரப்பு கோபுரமாக விளங்குகிறது.
இங்கிருந்து 1995-ம் ஆண்டுமுதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகள் ஒளி, ஒலிபரப்பாகின்றன. தமிழகத்தில் உள்ள கடற்கரை மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் ராமேசுவரம் தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு சேவை கிடைத்து வந்தது.
நாட்டிலேயே அதிக பரப்பளவுக்கு ஒளிபரப்பாகும் நிலையங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல் இலங்கைக்கும் இங்கிருந்து ஒளிபரப்பு சேவை கிடைத்தது. ராமேசுவரம் தீவு மீனவர்களுக்கு இந்த கோபுரத்தின் உச்சியில் விளக்கு வெளிச்சம் கலங்கரை விளக்கம் போன்றது. இதன் ஒளி இலங்கையில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கடல் பகுதியில் கூடத் தெரியும்.
இந்நிலையில் 26 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ராமேசுவரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை டிச.31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பை மக்கள் தற்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. டிடிஎச், கேபிள் டிவி, இணையம் வழியாக நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்களை மக்கள் கண்டுகளிக்கின்றனர்.
தரைவழி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தூர்தர்ஷன் மட்டுமே கிடைத்து வருவதால் மக்கள் இச்சேவையை பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ளஅனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில்நுட்பத்தை, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு (டிடிஎச்) மாற்ற பிரசார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 412தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்களின் தரைவழி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, ஊட்டி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய நிலையங்களின் தரைவழி ஒளிபரப்பு அக்.31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன. ராமேசுவரம், திருச்செந்தூர் ஆகியவை டிச.31 அன்றும், நெய்வேலி, ஏற்காடு ஆகியவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியிலும் நிறுத்தப்பட உள்ளன.
இந்தியா முழுவதும் 412 ஒளிபரப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம், அங்கு நேரடியாகப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுவந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.