தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
தொழில், கல்வி உள்ளிட்ட பல காரணங்களுக்காக மக்கள் சொந்த ஊர்களை விட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், வேறு மாநிலங்களிலும் தங்கி உள்ளனர். இவ்வாறு தங்கி பணிபுரியும் இவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் விடுமுறை நாட்களில் பேருந்துகளில், மக்கள் கூட்டம் அலைமோதும், மேலும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது.
இதன் காரணமாக மக்களின் போக்குவரத்து சிரமங்களை போகும் வகையில் பண்டிகை காலங்களில் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9-ம் தேதி முதல் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கும், தாம்பரம் மெப்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூருக்கும், மற்ற ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.