சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் வர்த்தகம் அனைத்து வணிகர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களால் அரசிற்கு எவ்வித வருவாயும் கிடையாது. உச்சநீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் பட்டாசு வணிகத்துக்கு தடை விதித்துள்ளது. ஆனால் குறைந்த முதலீட்டில் பலர் சட்டவிரோதமாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்கள்.
Also Read : மக்கள் மீது திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை – அண்ணாமலை காட்டம்..!!
இதனை தடுக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஏராளமான பொதுமக்கள் ஏமாந்து, மோசடி செய்யப்பட்டதாக கூறி பணத்தை இழந்து வருகின்றனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதனை சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 90 சதவீதம் வரை தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
பல இடங்களில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டாசுகளை அனுப்பாமல் இருப்பதாக புகார்கள் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.