Site icon itamiltv.com

இது உங்களால் பண்ண முடியுமா?எடப்பாடிக்கு சவால் விடுத்த துரைமுருகன் – தேர்தல் களத்தில் பரபரப்பு.!!!

ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மூத்த நிர்வாகியும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, இதுவே தனது கடைசித் தேர்தல் என்று கூறி துரைமுருகன் மக்களிடம் வாக்கு சேகரித்ததாகவும், அதன் விளைவாக அதிமுக வேட்பாளர் ராமு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது 88 வயதாகும் துரைமுருகனால் சரியாக நடக்கவோ, எழுந்து நிற்கவோ கூட முடியவில்லை என்றும், அப்படிப்பட்டவரால் எப்படி தொகுதி முழுவதும் சுற்றித் திரிந்து மக்களின் குறைகளைக் கேட்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


துரைமுருகன் மீதான தனது விமர்சனம் தனிப்பட்ட முறையிலானது அல்ல என்றும், அவரது வயது மூப்பைக் கருதி மக்கள் இம்முறை காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமையைப் பெறுவதற்காகத் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவதாகச் சாடிய அவர், தொகுதி மக்களின் நலனை விடத் தனது தனிப்பட்ட பெருமைக்கே அவர் முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.


எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த துரைமுருகன், “எடப்பாடி பழனிசாமி பேசும் பல பொய்களில் இதுவும் ஒன்று” என்று திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும், தனது உடல்நிலை குறித்து விமர்சித்தவருக்குச் சவால் விடும் வகையில், “வேண்டுமென்றால் என்னை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியை நடைப்போட்டிக்கு வரச் சொல்லுங்கள், அப்போது தெரியும் யாருக்கு தெம்பு இருக்கிறது என்று” எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும், காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவைத் துரைமுருகன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

Exit mobile version