உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் ( strong room ) செயலிழந்து போன நிலையில் இன்று ஈரோடு தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் இருந்த சிசிடிவி கேமராவும் பழுதாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் நேற்று முன்தினம் மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை.
இந்த செய்தி வெளியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்த பலரும் பல விதமாக பேச ஆரம்பித்துவிட்டனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நீலகிரி ஆட்சியர் அருணா சிசிடிவி கேமெராக்கள் செயல்படவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது .
கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை . எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை என நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் இந்த சம்பவம் அமைதியாவதற்குள் ஈரோடு தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் இருந்த சிசிடிவி கேமராவும் பழுதாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஒரு சிசிடிவி கேமரா நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செயல்படவில்லை.
ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 220 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதில் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை நோக்கி இருக்கும் ( strong room ) சிசிடிவி பழுதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.