எண்ணூர் வாயு கசிவால் பெரும்பாலான கிராமப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும், தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டதால், எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. பொதுமக்கள் அனைவருக்குமே தகுந்த மருத்துவ சோதனைகள் நடத்தி, அவர்கள் உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க, தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.