வட சென்னையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
வடசென்னை மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த எண்ணுரில் தனியார் நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வாயு கசிவால் பாதித்த மக்கள் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மருத்துவ குழுவுடன் கேட்டு அறிந்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அமோனிய வாயு கசிவு என்பது 10 விழுக்காடு காற்றிலும் நூறு விழுக்காடு தண்ணீரிலும் கலந்திருப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் எட்டு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு பாதித்துள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலையை சுற்றியுள்ள 15 க்கும் அதிகமான கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மூச்சு விட முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அமோனியா வாயு கசிவு காற்றில் கலந்ததால் நள்ளிரவில் மக்கள் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர். ஏற்கனவே சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கசிவு கடலில் கலந்தது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. சிபிசிஎல் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாசு கட்டுப்பாடு வாரியம் முறையான ஆய்வுகளை நடத்தி இருந்தால் அது போன்ற விபத்து நேரிட்டு இருக்காது. அமோனியா வாயு குழாய்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையான ஆய்வுகளை நடத்தாததால் தான் தற்போது இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு மக்கள் பாதித்திருக்கிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமோனியா வாயு கசிவு பாதித்து மக்கள் உரிய நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியமே இது போன்ற தொடர் பாதிப்புகளுக்கு காரணம். மாசு கட்டுப்பாடு வாரியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இதுபோன்ற விபத்துகளை முன்கூட்டியே தடுக்காவிட்டால் போபால் விஷவாயு கசிவு போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
சிபிசிஎல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்காமல் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக தான் இந்த அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்பினால் பாதிப்பு ஏற்படுத்திய சிபிசிஎல் நிறுவனத்தை மூடுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னை பகுதிகளில் ஏற்படும் இது போன்ற விபத்துகளை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எண்ணூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் மக்களைப் பயன்படுத்தி பெரிய அளவில் சம்பாதிப்பதும், மக்கள் வயிற்றில் ஈரத் துணியை கட்டிக் கொண்டும் இருக்க வேண்டுமா என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
மேலும், எண்ணூர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அமோனியா வாயு கசிவு விபத்து என்பது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும் இது போன்ற வாயு கசிவுகளால் விபத்து ஏற்படுவதும், அதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. மூத்த ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு அமைத்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து ஆய்வு செய்து, இது போன்ற விபத்துக்கள் மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலாளிகளுக்கு மட்டுமே திமுக அரசு ஆதரவாகவும், பாட்டாளிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிதி உதவி அளித்து உதவியதாக கூறிய நிகழ்வை எந்த ஒரு அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நேற்று நடைபெற்ற எழுச்சிமிகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், மதுரை மாநாட்டையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் பூச்சாண்டி கருத்துக்களை பன்னீர்செல்வம் கூறி வருவதாகவும், அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இருக்கிறார் என்பதை காண்பித்துக் கொள்ளவே, அறிக்கை என்பதை வெளியிட்டு வருகின்றனர். தேர்தலில் சந்தித்த தோல்விகளை மறந்து விட்டு பேசி வருகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிரந்தரமாக திமுக வனவாசத்திற்கு செல்லும். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.