இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அசரவைக்கும் பதிலளித்திருக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்துக்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அந்த சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்த பிறகு அப்பகுதி மக்களை சந்தித்தார்.
அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கிறது, கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை” என்று கூறினார்.
மேலும், “மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டியுள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1068.50க்கு விற்பனையானது. மார்ச் மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது சிலிண்டரின் விலை ரூ.1,118.50 ஆக உள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.