கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.
கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் சென்னை அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக பெய்த கடும் மழை, மற்றும் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆக்கிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கும், சென்னையில் உள்ள ரேசன் அட்டை தாரர்களுக்கும் தமிழ் நாடு அரசு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
சென்னையை தாக்கிய புயலைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த அதீத கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்காக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், முதல் கட்டமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.