முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தேர்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று அதிமுக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை திருமங்கலம் தொகுதியில் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலும் அதிமுக அலுவலகத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் ஐந்து முறை மேல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனைகள், ஆளுங்கட்சியின் தூண்டுதலால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அதிமுகவின் பணிகளை பாதிக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர். தினமும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களின் போது கூட இடையூறு செய்யப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினர்.
இதுவரை நடந்த சோதனைகளில் எந்தவித தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் தேவையற்ற அழுத்தத்தில் செயல்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், இப்படியான மிரட்டல்களால் தங்களின் தேர்தல் பணிகள் பாதிக்கப்படமாட்டாது என்றும், அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

