பெரு நாட்டில் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜோஸ் ஹ்யூகோ டிலா குரூஸ் மேசா (39) என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3ம் தேதி Juventud Bellavista மற்றும் Familia Chocca என்ற 2 கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தடைபட்டதும் மைதானத்தை விட்டு வெளியேறியபோது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது . மின்னல் தாக்கி வீரர்கள் சட்டென சாய்ந்து விழும் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் மின்னல் தாக்குதல் குறித்து பேசியுள்ள அறிவியல் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :
மின்னலின் வேகம் ஒரு நொடிக்கு 1,56,000 கி.மீ. ஆனால் அதன் தடிமன் 1 முதல் 2 அங்குலம்தான் இருக்கும். எனவே ஒருவரைத் தாக்கும் மின்னல், அவருக்கு அருகில் இருப்பவரையும் தாக்கும் என்ற அவசியமில்லை. ஒரு பகுதியில் மின்னலின் தீவிரம், இன்னொரு பகுதியில் வேறுமாதிரியாக இருக்கும்.
மின்னல் வெட்டும்போது தண்ணீரோ, ஈரமோ இல்லாத தரையில் நிற்க வேண்டும். கூரைக்குக் கீழ் நிற்பது மிகவும் பாதுகாப்பானது.
திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். உலர்ந்த இடமாக தேடி அமர்வது நல்லது. ஏனெனில் அமர்ந்திருக்கும்போது மின்னல் தலையில் தாக்குவதற்கான வாய்ப்பு சற்று குறைவு என வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.