மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிச.4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் சென்னையையொட்டி கரையை கடந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.
மேலும், பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
“சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடியவில்லை. திமுக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல நாங்களும் ஒரு மாத சம்பளத்தை பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.