இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமாகியுள்ளார்.
செப்டம்பர் 26 1932 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் பிறந்தவர் மன்மோகன் சிங் . சிறுவயதில் இருந்தே தேசப்பற்று மிக்க மனிதராக வலம் வந்த மன்மோகன் சிங் தனது கல்வியை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.
1962இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் 1971ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக தனது அரசியல் பணியை தொடங்கினர்.
இதையடுத்து 1991ல், ராஜ்யசபாவில் தனது அடுத்த அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கிய மன்மோகன் சிங், பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார். 2004 முதல் 2014 வரை இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார்.
அது மட்டுமின்றி, மன்மோகன் சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், திட்டக்குழு தலைவர், 23 ஆண்டுகளாக எம்பி மற்றும் பேராசிரியர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர்.
இந்நிலையில் 92 வயதாகும் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமாகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு தற்போது உலக தலைவர்கள் உளப்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.