மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா? யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம் நடத்தப்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மாநில அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் தற்காலச்சூழலில், பல கோடிகளைக் கொட்டியிறைத்து, சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 வாகனப்பந்தயம் நடத்தி, மக்களைப் பெருஞ்சிரமத்திற்கு ஆளாக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தீர்க்கப்படாத எத்தனையோ சிக்கல்களும், அத்தியாவசியப் பிரச்சினைகளும் வரிசைகட்டி நிற்கும்போது அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, வாகனப் பந்தயத்திற்கு அதீத முக்கியத்துவம் அளித்து, தேவையற்ற பொருட்செலவு செய்து, மக்கள் படும் அல்லல்களையும், பாடுகளையும் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் போக்கு மிக மோசமான நிர்வாகச்செயல்பாடாகும்.
அரசின் நிதிக்கருவூலம் காலியாகிற அளவுக்கு நிதிநெருக்கடி முதன்மைச்சிக்கலாக உருவெடுத்திருக்கும் தற்போதைய நிலையில், ஏறக்குறைய 200 கோடி ரூபாய்க்கு மேலாக வாரியிறைத்து வாகனப்பந்தயம் நடத்த வேண்டிய அவசியமென்ன? மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது; சொத்து வரி 150 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது; பள்ளிப்பாடப்புத்தகங்களின் விலைகூட உயர்த்தப்பட்டிருக்கிறது.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை அரசினால் இன்னும் ஏற்கப்படவில்லை; ஆசிரியப் பெருமக்களுக்கு நிறைவேற்றித் தரப்படுவதாகக் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுநாள்வரை நிறைவேற்றவில்லை; அரசுப்பள்ளிக்கூடங்களின் உட்கட்டுமானத்திற்கும், பராமரிப்புக்குமான செலவினங்கள் அரசுத்தரப்பிலிருந்து முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை; அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் வழங்குவதே பெருஞ்சிக்கலாகி நிற்கிறது.
Also Read : திருப்பூரில் 107 வயது பாட்டிக்கு கோலாகலமாக நடத்தப்பட்ட கனகாபிஷேக விழா..!!
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள்நலப்பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இன்றுவரை முடியவில்லை. இவ்வாறு மக்கள்விரோத விலையுயர்வுக்கும், துறைகள் சார்ந்த முதன்மைச்சிக்கல்களுக்கும் ஒற்றைக்காரணமாகச் சொல்லப்படுவது மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையும், மிதமிஞ்சிய பொருளாதார நெருக்கடியும்தான்! இப்பேர்ப்பட்ட சூழலில் மக்கள் நலனென்பது துளியாவது இருந்தாலும், ஏறக்குறைய 200 கோடியை வாகனப் பந்தயத்துக்காக விரயம் செய்வார்களா திராவிட மாடல் ஆட்சியாளர்கள்? பேரவலம்!
துப்புரவுப்பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவப்பெருந்தகைகள், ஆசிரியப்பெருமக்கள் என சமூகத்தின் அச்சாணியாகத் திகழும் அத்தனைத் துறையைச் சேர்ந்த மக்களும் தங்களது வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்து நாள்தோறும் போராடுகிறார்கள். இவர்களது கோரிக்கைகளை ஏற்று, சிக்கல்களைத் தீர்க்க முன்வராத திமுக அரசு, யார் கோரிக்கையை நிறைவேற்ற வாகனப்பந்தயம் நடத்துகிறது? யாரை மகிழ்விக்க நடக்கிறது இந்த ஆடம்பர விளையாட்டு?
தேர்தல் பத்திரங்கள் மூலமாக திமுகவுக்கு 105 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த பி.பி.ரெட்டிக்கு நன்றிக்கடனாக அவரது மருமகன் அகிலேஷ் ரெட்டியின் ரேசிங் ப்ரொமோஷன்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து வாகனப்பந்தயத்தை நடத்துகிறதா திமுக அரசு? வெட்கக்கேடு! இதே ரேசிங் ப்ரொமோஷன்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் வாகனப்பந்தயத்தை நடத்தி அதில் குளறுபடிகளும், பாதுகாப்பின்மையும் விளைந்து போட்டியே ரத்துசெய்யப்பட்டதே, அப்பேர்ப்பட்ட நிறுவனத்தோடு இணைந்துதான் வாகனப்பந்தயத்தை நடத்துகிறது திமுக அரசு.
என்ன ஒரு நேர்த்தியான நிர்வாகம்? திமுக எனும் கட்சி பெற்ற பயனுக்குக் கைம்மாறு செய்ய ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் வளைத்து, மக்களை வாட்டி வதைப்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்த விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பாளரோ, பார்வையாளரோ எளிய மக்கள் இல்லை எனும்போது யாருக்காக நடக்கிறது இந்தப் பந்தயம்? இது யாருக்கான ஆட்சி? மக்களுக்கான ஆட்சியா? இல்லை! தனிப்பெருமுதலாளிகளுக்கான ஆட்சியா?
மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடிப்பது ஒருபுறமென்றால், மக்கள் அடர்த்தியும், போக்குவரத்துப்புழக்கமும் மிகுந்த மாநகரத்தின் மையப்பகுதிக்குள் இதனை நடத்துவது கொடுமையிலும் கொடுமை இல்லையா? நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், தொலைநோக்கற்ற நகரக்கட்டமைப்பாலும் போக்குவரத்து நெரிசலில் சென்னை மாநகரம் சிக்கித் தவிக்கிறது.
ஒவ்வொரு நாளின் மாலைவேளையிலும் நத்தை ஊர்வதைப் போல, வாகனங்கள் ஒவ்வொன்றும் நகர்கின்றன. நோயாளிகளின் உயிரைக் காக்கும் அவசர ஊர்திகூட சாலையில் செல்வதற்கு வழிவாய்ப்பற்று, போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டுவிடுகிறது. இத்தகைய நிலையில், மாநகரத்தின் மையப்பகுதியில் வாகனப்பந்தயத்தை நடத்துவதன் மூலம் மக்களைக் கொடுந்துன்பத்திற்கு ஆளாக்குவதைத் தவிர, வேறென்ன சாதித்துவிட முடியும்?
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என இரு பெரும் மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி, வாகனப்பந்தயத்தை நடத்தினால் அதில் எழுப்பப்படும் அதிகப்படியான ஒலியளவும், இரைச்சலும் நோயாளிகளைப் பாதிக்குமெனும் அடிப்படைப்புரிதல்கூடவா அரசுக்கு இருக்காது? அப்படியென்ன வாகனப்பந்தயத்தை நடத்தி, வளர்ச்சியை நிலைநாட்டப் போகிறீர்கள் பெருமக்களே? திருப்பெரும்புதூர் அருகேயுள்ள இருங்காட்டுக்கோட்டையில் வாகனப்பந்தயத்தை நடத்த வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது மாநகரத்துக்குள் நடத்துவதேன்? விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால், தம்பி உதயநிதி மக்களின் உயிரோடு விளையாடலாமா?
மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போதுவரை மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையவில்லை; மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் முழுமைபெறவில்லை.
கடந்தாண்டு போல, மீண்டும் ஒரு கனமழை வந்தால் மக்கள் பெரும் துயரத்தையும், இழப்பையும் சந்திப்பார்கள் என்பதுதான் தற்போது இருக்கக்கூடிய புறச்சூழல். அப்படியிருக்க, இதில் கவனஞ்செலுத்தி, பேரிடரிலிருந்தும், பெரும் மழையிலிருந்தும் மக்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, அதனைச் செய்யாமல் தனிநபர்களை மகிழ்வடையச் செய்ய பல கோடிகளைச் செலவழித்து வாகனப் பந்தயத்தை நடத்துவதென்பது மக்கள் விரோதத்தின் உச்சம் இல்லையா?
வாகனப்பந்தயம் நடக்கும் தீவுத்திடலுக்கு எதிரேயுள்ள சத்தியவாணி முத்து நகரில் விளிம்பு நிலை மக்கள் இன்றும் குடிசையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசு, பல கோடிகளை வீணடித்து வாகனப் பந்தயம் நடத்துவது கேலிக்கூத்தானது.
ஆட்சியாளர் பெருமக்களே! அரசாட்சி தன்வசமிருக்கும் மிதப்பிலும், பதவி தரும் மமதையிலும், அதிகாரத்திமிரிலும் மக்கள் நலனை முற்றாகப் புறந்தள்ளி, தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும், தன் இலாபத்திற்காகவும் அதிகாரமுறைகேடும், அட்டூழியமும் செய்து ஆட்டம் போடாதீர்கள்! பெரும் பெரும் சாம்ராஜ்யங்களே வீழ்த்தப்பட்டிருக்கின்றன; உலகின் பெரும் பேரரசுகளே சிதைந்துபோயிருக்கின்றன.
சர்வாதிகாரம் கொண்டு நின்ற கொடுங்கோலர்களே இருந்த இடம்தெரியாது அழிந்துபோயிருக்கிறார்கள். அப்படியிருக்கையில், நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? இன்னும் எத்தனை நாளைக்கு? எஞ்சியிருப்பது இன்னும் இரண்டே ஆண்டுகள் ஆட்சி! அது முடிந்ததும், மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன் என சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.