இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 12 ,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றுகிறார்.
இன்று அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 12 ,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. வழக்கமாக ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய தேதிகளில் இந்த கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டு, வழக்கமான 4 தினங்களுடன் சேர்த்து மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி நாளிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
மேலும், தங்களது பகுதியில் உள்ள கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்று கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில், ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற உள்ளது.