நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கி வரும் திமுக அரசு, இனியாவது நீட் விலக்கு பெறுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
“தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது.
முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசும், ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத திமுக அரசும் தான் மாணவனின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இதையும் படிங்க : பெண் டாக்டர் பாலியல் படுகொலை : மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – குஷ்பு!!
நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேறாத நிலையில், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும்.
நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கி வரும் திமுக அரசு, இனியாவது நீட் விலக்கு பெறுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக மாணவர்கள் விழிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தோற்றால் வாழ்க்கையை இழந்து விட்டதாக அர்த்தம் இல்லை.
உயர்கல்வியில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.