கவர்னர் தேநீர் விருந்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வழக்கமாக குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது தமிழக கவர்னர் மாளிகையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளிக்கப்படும்.
அதன்படி, இன்று 78வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (15.08.24) வியாழக்கிழமை மாலையில் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு கவர்னர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, திமுக, தமிழக காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை அறிவித்தனர்.
இதனிடையே கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதையும் படிங்க : விவசாய நில பாதை ஆக்கிரமிப்பு : மன உளைச்சலில் உழவர் சாவு – அன்புமணி கண்டனம்!
அதன்படி, இன்று சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.