தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் (ration shops) தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது வரை வரத்து குறைவால் தக்காளி விலை குறையாமல் உள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் (ration shops) இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வட சென்னை 32, மத்திய சென்னை 25, தென்சென்னை 25 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்றும், முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.