கேங்மேன் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“மின்வாரியத்தில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் – கேங்மேன் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பதோடு அவரவர் மாவட்டத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார வாரிய நிர்வாகக் குழு அனுமதி வழங்கியும், அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தும் மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கே, தற்போது கேங்மேன் தொழிலாளர்கள் மாநில அளவில் திரண்டு போராடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மழை, வெள்ளம், உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் காலங்களிலும் மக்களுக்கு தேவையான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து இரவு, பகலாக பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கேங்மேன் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.