திருமாவளவன் தலைமையிலான வி.சி.க-வினர் இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்துகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
காந்தி பிறந்த நாளான இன்று சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். அதன் பின், செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது..
“இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
அவர்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இது தான் அவர்களுடைய கொள்கை.
நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால், திருமாவளவன் காந்தியைத் தவிர்த்து விட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க : திமுக அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி!
அவர் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று தான் எனக்கு புரியவில்லை.
ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ? நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரா என்று எனக்கு தெரியவில்லை.
உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கையாகும். அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.