16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் – மாரடைப்பால் மரணம்!

கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை (cardiologist) மேற்கொண்ட மருத்துவர், தன்னுடைய 41வது வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதாகும் கவுரவ் காந்தி என்ற நபர் இதய அறுவை சிகிச்சை நிபுணராக (cardiologist) பணியாற்றி வந்தார்.

இவர் ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற பின்னர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். அதையடுத்து தன்னுடைய பணிக் காலத்தில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து உள்ளார் கவுரவ் காந்தி.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக, கவுரவ் காந்தி திங்கள் கிழமை இரவு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழக்கம்போல மருத்துவம் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பின்னர் இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளார்.

ஆனால், காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று எழுப்ப முயன்றுள்ளனர்.

ஆனால், அவர் எழவில்லை என்றவுடன் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Total
0
Shares
Related Posts