திமுகவில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர தலைமைப் பொறுப்புக்கு யாரும் வர முடியாது என்பதை பிரகடனப்படுத்தவே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறிருப்பதாவது :
திமுகவில் 60, 70 வருடங்களாக உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர தலைமைப் பொறுப்புக்கு யாரும் வர முடியாது என்பதை பிரகடனப்படுத்தவே உதயநிதி துணை முதல்வராக நியமித்துள்ளனர்.
பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இது ஆன்மிக மாநாடு அல்ல என்றுதானே பேசினார். அப்படி என்றால் அவர் முருகனையும் ஏற்கவில்லை. இந்து மதம், இந்து கடவுளையும் ஏற்கவில்லை என்றுதான் அர்த்தம்.
பாஜகவில் எப்போதும் மோடி டீம் மட்டும்தான். எங்களுக்கு திமுக, அதிமுக ‘பி’ டீமாக இருக்க வேண்டாம். தமிழகத்தில் தினமும் கொலைகள் நடந்து வருகின்றன. என்கவுன்ட்டர் மட்டும் அதிகரிக்கவில்லை. காவல்நிலைய விசாரணைக் கைதிகூட கொல்லப்படுகிறார் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.