நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில்,
“நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது…
உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை..!
எவன் ஒருவன் தானே சரணடையாமல்,
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல்,
அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ?
அவனே சுதந்திர மனிதன்!” – என்கிறார் புரட்சியாளர் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்.
“சுதந்திரம் இல்லாத நாட்டிற்கு எந்தப் பெருமையும் இல்லை!” – என்கிறார் ரூசோ.
“சுதந்திரம் இல்லாத நாடு; வெறும் காடு!” – என்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
“சுதந்திரம் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாத உயிர்களுக்கும் சுதந்திரம் தேவைப்படுகிறது!” – என்கிறார் ஹோ சே மார்த்தி.
“சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!” – என்கிறார் பால கங்காதர திலகர்.
“கொஞ்சம் இரத்தம் தாருங்கள்; நிறைய சுதந்திரம் தருகிறேன்!” – என்கிறார் மாவீரன் சுபாஷ் சந்திர போஸ்.
“சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை, புரட்சி என்பது மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை.” என்கிறார் புரட்சியாளர் பகத்சிங்
“சுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தமற்றது!” – என்கிறார் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
அப்படி பல்லாயிரம் வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, செக்கடியிலும் சிறைச்சாலையிலும் வதைபட்டு, மிதிபட்டு, அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று அனைவருக்கும் சரியாக, சமமாக இருக்கிறதா? கிடைக்கிறதா?
எந்த நோக்கத்திற்காக இந்த நாடு விடுதலைப்பெற்றதோ? அந்த இலட்சியம் நிறைவேறிவிட்டதா?
கல்லூரியில் படிக்கும் பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
வீட்டருகே விளையாடும் பெண் குழந்தைகூட வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்.
படிக்க வசதியற்ற குழந்தைகள்…
போதையில் தள்ளாடும் இளைய தலைமுறை…
ஆதரவற்று நிற்கும் பெண்கள்…
வறுமையில் வாடும் முதியோர்கள்…
வியாபாரப் பண்டம் போல் விற்கப்படும் மருந்துவம், கல்வி…
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்,
ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள்,
மது விற்கும் அரசு என எதுவொன்று இங்கு சரியாக, முறையாக இருக்கிறது? இயங்குகிறது?
அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கி,
தனியார் முதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று கட்டமைக்கும் அரசு,
அரசின் தவறுகளை எதிர்த்துப் போராடினால், கேள்வி கேட்டால் கொடுஞ்சிறை என்றால்
எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம்?
எங்கே இருக்கிறது பேச்சு சுதந்திரம்?
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு,
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு,
மணிப்பூரில் மதக்கலவரம்,
பஞ்சாப்பில் பதற்றமான சூழல்,
ஆந்திராவில் அடக்குமுறை,
கர்நாடகாவில் காவிரி நீர் தர மறுத்து கடையடைப்பு,
குஜராத்தில் குண்டுவெடிப்பு,
கொல்கத்தாவில் கொடூரக் கொலைகள்,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
என சுடுகாடாய் மாறி நிற்கும் நாட்டில் எங்கே இருக்கிறது சுதந்திரம்?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?
நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ?
ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் -வெல்லமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரை கண்ணீராற் காத்தோம்! கருகத்திருவுளமோ?
என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகள் உள்ள வலி நம் உள்ளத்திலும் ஆறாமல் அப்படியே இருக்கிறது.
பசி-பஞ்சமற்ற, ஊழல்-இலஞ்சமற்ற, பாலியல் வன்புணர்வு, பெண் அடிமைத்தனமற்ற, வர்க்க பேதமற்ற, சாதிய இழிவு தீண்டாமையற்ற, அடக்குமுறை-ஒடுக்குமுறையற்ற, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் பொருளாதார விடுதலைப்பெற்ற சமத்துவ சமுதாயம் பெறுவது எப்போது? அமைப்பது யார்?
பாலுக்கு அழாத குழந்தை..,
கல்விக்கு ஏங்காத மாணவன்..,
வேலைக்கு அலையாத இளைஞன்..,
இதுவே என்னுடைய கனவு இந்தியா..!
அடிமை இந்தியாவில் அன்று மாவீரன் பகத்சிங் கண்ட கனவு
சுதந்திர இந்தியாவில் இன்றும் நிறைவேறாமல் அப்படியே இருக்கிறது!
அந்தக் கனவை நிறைவேற்றி உண்மையான சுதந்திரத்தை நாம் ஒன்றுகூடி போராடிப் பெற்றிட விடுதலை திருநாளில் உறுதியேற்போம்!
விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துகள்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? எனப் பதிவிட்டுள்ளார்.