தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெங்கு எப்படிப் பரவுகிறது?
ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் நோய் இது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வலம்வரக்கூடியவை. கொசு கடித்து ஐந்தாறு நாட்களில் காய்சலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும். டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு ஹாமொராஜிக் காய்ச்சல் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. முதல் வகை ஃப்ளு காய்ச்சல் போன்றது. இரண்டாம் வகைக் காய்ச்சலால் உயிரிழப்புகூட ஏற்படும்.
அறிகுறிகள்:
பருவமழை தொடங்கும் கால மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது.காய்ச்சல், தலைவலி, கண்ணுக்குப் பின்புறம் எடுக்கத் தொடங்கும் வலி போன்றவை முதற்கட்ட அறிகுறிகள்.தசை மற்றும் மூட்டு வலி.பசியின்மை.சுவையை உணர முடியாமல்போதல்.தட்டம்மைபோல மார்பு மற்றும் மூட்டுகள் அருகே சருமப் பிரச்சினைகள் வரக்கூடும். குமட்டலுடன் கூடிய வாந்தி என ஏற்படக்கூடும்.
இதையும் படிங்க: கருஞ்சீரகம் : அத்தனை நோய்களுக்கும் ஒரே மருந்து – அதிசய மருத்துவ குணங்கள்!
பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை:
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய
மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இன விருத்தி செய்கின்றன. எனவே, தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது தலையாய பணி.
குப்பைகள், வீணாகும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
கொசு வலை, முழுக்கை-முழுக்கால் சட்டைகள் என்று கொசு கடிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
டெங்குக்கான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதமின்றி மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.