தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
மற்றும் ஏனைய கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.