குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்றும் திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி உள்ளிட்டட பல பகுதிகளில் மழை பெய்தது.

அதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே செப்டம்பர் 5ஆம் தேதி இரவு அல்லது செப்டம்பர் 6ஆம் தேதி காலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காணரமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts