பசும்பொன் முத்து முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை மதுரை மாவட்டத்திற்க்குள் கனரக வாகனங்கள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது.
முன்னதாக, கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பசும்பொன் செல்லக்கூடிய பிற மாவட்ட வாகனங்கள் மதுரைக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.