இந்தியா நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இதுவரை 2 விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் திட்டமான சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்தியாரன்-1 செயற்கைக் கோள் தயாரிப்புக்கு 470 கோடி ரூபாய் செலவானது.
அதனித் தொடர்ந்து, சந்திரயான்-1 வெற்றிக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டின் உதவியுடன் சந்திரயான்-2 ஐ விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியில் கடைசி கட்டத்தில் அந்த திட்டம் தோல்வியடைந்தது.
மேலும், சந்திரயான்-1 வெற்றிக்குப் பிறகு, விண்வெளித்துறையில் சந்திராயன்-2 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 978 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
ஆனால், சந்திராயன்-2 தோல்விக்குப் பின்னர் தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்திற்காக மொத்தம் 615 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்திராயன்-2 திட்டத்தில், செயற்கைகோள் வடிவமைப்பிற்கு மட்டும் 375 கோடி ரூபாயும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், நேவிகேசன் ஆகியவற்றுக்கு சுமார் 603 கோடி ரூபாயும் செலவானது.
ஆனால், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டை வடிவமைக்க 365 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், நிலவிற்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவும் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை கருவிகளுக்காக வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.
முன்னதாக, சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் கடந்த 3 ஆண்டுகளாக நிலவை சுற்றி வரும் நிலையில், தற்போது சந்திரயான்-3ன் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகள், ஏற்கனவே நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதனால், சந்திரயான் 3 திட்டத்தில் ஆர்பிட்டர் இடம்பெறவில்லை. இதனால் தான், சந்திரயான்-3 விண்கலதின் செலவு குறைந்து இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.