நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவர் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். அந்தவகையில், மனம் கொத்தி பறவை திரைப்படம் முதல் தொடங்கி சீமராஜா படம் வரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு பக்கபலமாக இருந்தவர் டி.இமான்.
ஆனால், சீமாராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் – டி.இமான் கூட்டணியில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் இந்த கூட்டணி எப்போது மீண்டும் எப்போது அமையும் என்று கேட்டு வந்தனர்.
இதனிடையே தான் தற்போது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய டி.இமான்..
“எப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் – டி.இமான் கூட்டணி நிகழும் என்ற கேள்விக்கு, இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும், அவர் செய்த துரோகத்தை மன்னிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர், என் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவரே எனக்கு துரோகத்தை செய்யும்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இதை பற்றி நான் மேலும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்த ஜென்மம் ஒன்று இருந்து அதில், நான் இசையமைப்பாளராகவும், சிவகார்த்திகேயன் நடிகராகவும் இருந்தால் இது நடக்க வாய்ப்புள்ளது. இந்த முடிவை நான் மிகவும் கவனத்துடன் தான் எடுத்துள்ளேன். அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.
இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்ட போதும்..அதற்கான அவரது பதிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதை வெளியில் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.
டி.இமானின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.