கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றால் இதுவரை 46 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, இன்று இரவு முதல் நாளை காலை வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஏற்கனவே அமல்படுத்த கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் நபர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.