சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் முகக்கவசம் அணியாத 1022 பேரிடம் இருந்து 2.18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரில் கொரோனோ மற்றும் ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நேற்று, காலை, மாலை என இரு நேரங்களில் 23 குழுக்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் நேற்று வரை 2,603 பேரிடமிருந்து 5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் முகக்கவசம் அணியாத 1022 பேரிடம் 2.18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக 8வது மண்டலத்தில் ரூ.35 ஆயிரமும், அதற்கு அடுத்தபடியாக 7வது மண்டலத்தில் 23 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 1வது மண்டலத்தில் 5,300 ரூபாய் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.