இந்திய அணியில் இருந்து சில காலமாக விலகி உள்ள லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் ( Yuzvendra Chahal) தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சந்தித்த சவால்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மதுபான பழக்கத்தை முற்றிலும் கைவிட்டது தனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர்
ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் சாஹல், 2023 வரை 170க்கும் மேற்பட்ட போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே நேரத்தில், தனது உடல் மற்றும் மனநிலையை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல்
2025 ஐபிஎல் தொடரில் Punjab Kings அணிக்காக விளையாடிய அவர், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது இன்னும் மனதில் வலி தருகிறது என தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் Royal Challengers Bangalore அணியிடம் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஏமாற்றமளித்ததாக கூறினார். மேலும், முக்கிய வீரரான Marco Jansen இல்லாததும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என குறிப்பிட்டார்.
மனம் திறந்த பேச்சு
அதோடு, தொடரின் முக்கிய கட்டத்தில் தான் காயமடைந்ததும் அணியின் செயல்பாட்டை பாதித்ததாக சாஹல் தெரிவித்தார். இந்த அனுபவங்களுக்குப் பிறகு, தனது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மதுபானத்தை முற்றிலும் கைவிட்டுள்ளதாகவும், தற்போது அதிக சுறுசுறுப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நல்ல உடல்நிலை மற்றும் கட்டுப்பாடு இருந்தால்தான் அணிக்காக முழு திறனையும் வெளிப்படுத்த முடியும் என்றார். இந்த மாற்றம் தனது வாழ்க்கையில் புதிய திசையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாஹல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

